"புரெவி"வெள்ளி அதிகாலைக்குள் கரையைக் கடக்கும் : தென்மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு

0 6091

புரெவி புயல் வெள்ளிக்கிழமை அதிகாலை கன்னியாகுமரிக்கும் பாம்பனுக்கும் இடையே கரையைக் கடக்கும் என்றும், இதன் காரணமாகத் தமிழகத்தின் தென்மாவட்டங்களில் இன்றும் நாளையும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வுத்துறை தெரிவித்துள்ளது. 

வானிலை ஆய்வுத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், தென்மேற்கு வங்கக் கடலில் நிலவும் புரெவி புயல் மணிக்கு 25 கிலோமீட்டர் வேகத்தில் மேற்கு வடமேற்கு நோக்கி நகர்ந்து வருவதாகக் குறிப்பிட்டார்.

இது இன்று பகல் பதினொன்றரை மணி நிலவரப்படி பாம்பனுக்குக் கிழக்கு தென்கிழக்கே 370 கிலோமீட்டர் தொலைவிலும், கன்னியாகுமரிக்குக் கிழக்கு வடகிழக்கே 550 கிலோமீட்டர் தொலைவிலும் நிலவியதாகக் குறிப்பிட்டுள்ளது. இந்தப் புயல் மேலும் வலுப்பெற்று மேற்கு வடமேற்காக நகர்ந்து இன்று இரவுக்குள் இலங்கையின் திரிகோணமலைக்கு அருகில் கரையைக் கடக்கும் எனக் குறிப்பிட்டுள்ளது.

இது நாளைக் காலை மன்னார் வளைகுடா, அதையொட்டிய குமரிக்கடல் பகுதியில் நிலவும் என்றும், நாளை நண்பகல் வாக்கில் பாம்பனுக்கு மிக அருகில் வரும் என்றும், அதன்பின் மேற்கு தென்மேற்கு நோக்கி மெதுவாக நகர்ந்து வியாழன் இரவு முதல் வெள்ளி அதிகாலைக்குள் பாம்பனுக்கும் கன்னியாகுமரிக்கும் இடையே கரையைக் கடக்கும் என்றும் தெரிவித்துள்ளது.

புயல் கரையைக் கடக்கும்போது மணிக்கு 90 கிலோமீட்டர் வேகத்தில் சூறைக்காற்று வீசும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக இன்றும் நாளையும் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் ஒருசில இடங்களில் அதிகனமழை பெய்யக் கூடும் எனக் குறிப்பிட்டுள்ளது.

நாளை கேரளத்தின் திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம்திட்டை, ஆலப்புழை மாவட்டங்களில் அதிகனமழை பெய்யக் கூடும் என்றும், வெள்ளியன்று தென்தமிழகத்தில் ஒருசில இடங்களில் கனமழை முதல் மிகக்கனமழை வரை பெய்யக் கூடும் எனக் குறிப்பிட்டுள்ளது.

வட தமிழகத்திலும் புதுச்சேரியிலும் நாளை ஒருசில இடங்களில் கனமழை முதல் மிகக் கனமழை வரை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது. தென் தமிழகம், தென் கேரளப் பகுதிகளில் நாளை கனமழை பெய்யக்கூடும் என்பதால் அப்பகுதிகளுக்குச் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குமரிக்கடல், மன்னார் வளைகுடா, தென்தமிழகக் கடலோரம், கேரளக் கடலோரப் பகுதிகளுக்கு இன்று முதல் மூன்று நாட்களுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என எச்சரித்துள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments